Thursday, January 14, 2010

சூரியனுக்கு ஒரு பொங்கல்

குளிர் காற்று வீசுகிறது!
போர்வையை விலக்கிக்கொள்ள
விரும்பாமல்
எட்டிக் கிடந்த
மொபைல் அலாரத்தை நிறுத்திவிட்டு
மீண்டும் போர்வைக்குள்
அடுப்பு மூட்டிக்கொண்டு...

சன்னல் கண்ணாடிக்கு வெளியில்
சூரிய வெளிச்சம்
தட்டிக்கொண்டிருந்தது;
வீட்டுப்பெண் எழும்பி
பாத்திரப் பண் சமைத்தாள்
"எல்லோரும் எழும்புங்க,
எழும்புங்க" என்றொரு
கீதம் இசைத்தாள்!
படுக்கை சுருட்டப்பட்டது!

பொங்கல் பானை;
விசம் குடித்த வேதணையில்
நுரைதள்ளிக்கொண்டு
இறந்துபோன விவசாயிகளை
எண்ண வைத்தன!

பொங்கல்,
வடை,
பழங்கள்
படைக்கப்பட்டன.

பொங்கல் வாழ்த்துக்கள்
பரிமாறப்பட்டன!

விவசாய நிலங்களிலிருந்து
வீசி எறியப்பட்ட கைகள்
வாயிற் கதவில் பிச்சைக்காக
ஏந்திகொண்டு நிற்கின்றன
விடுதலைக்கான ஆயுதங்களை
முதுகில் சுமந்துகொண்டு...

சூரியன்கள் மூளைக்குள்
சுவாலைகளை விதைக்க
சம்பிராதயக் கணக்கில்
முடிந்துபோனது
சூரியப் பொங்கல்!

- சக்திவேல்

Sunday, January 10, 2010

உழைக்கும் மழை

பச்சை மரங்களின்
பரிதாபக் குரல் கேட்டு
தரணிக்கு வந்து சேர்ந்த
தாயக சேவகன்.

ஏழைகளின் வீடுகளை
இழந்திருக்கும் காடுகளை
உலகத்துக்கு காட்டும்
உத்தம போராளி!

வீதிகள் போடத்தெரியாத
விவரங்கெட்ட அரசியலை
வெளிச்சத்துக்கு காட்டும்
விசாரணை அதிகாரி!

ஏரிகளை ஆக்கிரமித்து
வீடுகளை கட்டிக்கொண்ட
சீர்கேட்டாளர்களை
சிறைபிடிக்கும் சிங்காரி!

பாதள சாக்கடைகள்
வடிகால் திட்டங்கள்
ஏழைகளின் இருப்பிடங்களில்
ஏற்படுத்தவில்லையென
சாக்கடையோடு சேர்ந்துகொண்டு
சாலைமறியல் நடத்தும்
தார்மீக போராளி!

மண்ணோடு புணர்ந்து
மரங்களை பெற்றெடுக்க விடாமல்
பிளாஷ்டிக் இராணுவம்
பிடித்து வைத்திருக்கும்
பயங்கரவாதி!

குண்டுமழை பொழிகின்ற
குண்டர்களின் தேசத்தில்
அகதிகளின் கண்களில்
கண்ணீர்மழை யாகி
கவலைப்படும்.

காடுகளை அழித்து
கற்பழிக்கும் ஓநாய்களை
மலைவாழ் மக்களுடன் சேர்ந்து நின்று
மலையாக துரத்தும்

வீதிக்கு வந்து
பள்ளங்களை நிறைத்து
ஊரையே கைப்பற்றும்
முக்கிய செய்தியாய்
முணுமுணுக்க வைக்கும்
பிரதமரைக்கூட
ஹெலிகொப்படரில் அழைத்துவந்து
போராட்டத்தை காட்டும்.

திருந்தவில்லை அவர்கள்
திருந்த மாட்டார்கள்.

நிவாரணக் கொள்ளைக்கு
திட்டம் போடுகிறார்கள்.
மண்ணைபோட்டு
சமாதி கட்டுகிறார்கள்.

மழைக்கும் கோபம் வரும்!